மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார் என்பது ஏற்கனவே தனக்கு தெரியும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இந்தியாவின் 18 வது மக்களவைக்கு 543 மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தொடங்கி நேற்று வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏழாம் கட்ட வாக்குப்பதிவு பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் யூனியன் பிரதேசத்தில் காலை 7:00 மணிக்கு தொடங்கி நிலையில் நேற்று 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது . அதனைத் தொடர்ந்து 6.30 மணி அளவில் இந்தியாவின் பல்வேறு முன்னணி செய்தி நிறுவனங்கள் பொதுமக்களிடம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில் பெரும்பாலான நிறுவனங்களின் கணிப்பு பாஜகவே மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதுதான் 350 தொகுதிகளில் இருந்து 400 தொகுதிகள் வரை பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்றே கூறியிருந்தன. மேலும் 125 லிருந்து 175 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என ஊடகங்கள் கணித்திருக்கின்றன அதே நேரத்தில் ஒரு சில ஊடகங்கள் 300 தொகுதிகளுக்கு மேல் பெற்று காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனக் கூறியிருக்கின்றன.
இந்நிலையில் கருத்து கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதை காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. மேலும் தேர்தல் முடிவுகள் தான் ஆட்சியமைப்பதை தீர்மானிக்கும் எனவும், முடிவுகள் வரை காத்திருக்க வேண்டுமென அக்கட்சியினர் கூறுகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார் என்பது தனக்கு ஏற்கனவே தெரியும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். திருச்சியில் அமமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த டிடிவி தினகரன் மணமக்களை ஆசீர்வதித்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், நேற்று வெளியிடப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என கூறப்பட்டிருக்கிறது. மூன்றாவது முறையாக மோடி தான் ஆட்சிக்கு வருவார் என்பது ஏற்கனவே எனக்கு தெரியும், தேர்தலில் தமிழ்நாட்டில் மாற்றம் உண்டாகுமா என கேட்கிறார்கள் நான்காம் தேதி எல்லாமே தெரிந்து விடும்.. அதற்குப் பிறகு உண்மை என்ன என்பதும் உங்களுக்கு தெரியும்.
கருத்துக்கணிப்பின்படி அதிமுக எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் தலைமையில் மாற்றம் ஏற்படுமா என்று செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர், “தேர்தல் முடிந்தவுடன் அதைப் பற்றி பேசலாம் இந்த நேரத்தில் கருத்துக்களை கூற முடியாது” என்றார். அதிமுக உங்கள் கட்டுப்பாட்டுக்கு வருமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, “அம்மாவின் தொண்டர்கள் எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டுவது தான் என்னுடைய நம்பிக்கை” என்றார்.