ஜெய்ராம் ரமேஷிடம் விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்!

வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பாக 150 மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த குற்றச் சாட்டு தொடர்பான விரிவான தகவல் மற்றும் ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு ஜெய்ராம் ரமேஷிடம் இந்திய தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணை யம் கூறியுள்ளதாவது:-

மாவட்ட ஆட்சியர்கள்தான் தேர்தலின்போது அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளாக செயல்படுகின்றனர். எனவே ஜெய்ராம் ரமேஷின் இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. எந்தவொரு மாவட்ட ஆட்சியரும் தாங்கள் மிரட்டப்படுவதாக இதுவரை புகார் தெரிவிக்கவில்லை. இருப்பினும், ஒரு முக்கிய அரசியல் கட்சியின் மூத்த தலைவர் சுமத்திய குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு பொது நலனுக்காக அதற்கான விவரங்களை தருமாறு அவரிடம் கோரப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் செயல்முறை ஒவ்வொரு தேர்தல் அதிகாரியின் புனிதமான கடமையாகும். ஒரு மூத்த, பொறுப்பான மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவரின் இத்தகைய பகிரங்க அறிக்கை தேர்தல் நடைமுறைகளின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த காரணமாகிவிடும். எனவே, பொது நலனுக்காக அதுதொடர்பான ஐயங்கள் தீர்க்கப்பட வேண்டியது அவசியம். அதற்காகவே ஜெய்ராம் ரமேஷிடம் விவரங்கள் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

மாவட்ட ஆட்சியர்களை அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டி வருகிறார். இது, அப்பட்டமான விதி மீறல். வெட்கக் கேடான செயல். இதுவரை அவர் 150 பேரிடம் பேசியுள்ளார். இது, பாஜகவின் அவநம்பிக்கையை காட்டுகிறது என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.