பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், காற்றின் தரம், கார்பன் உமிழ்வு போன்ற 40 வகையான அளவீடுகள் கொண்டு தரவரிசைப்படுத்தப்படும். இதன்படி, 180 நாடுகளின் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா கடைசி இடமான 180வது இடத்தை பெற்றுள்ளது.
சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்காக மதிப்பிடப்பட்ட 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சுற்றுச்சூழல் தொடர்பான சட்டம் மற்றும் கொள்கைகளை வகுக்கும் யேல் மையம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச புவி அறிவியல் தகவல் வலையமைப்பு மையம் சார்பில், 2022ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், காற்றின் தரம், கார்பன் உமிழ்வு போன்ற 40 வகையான அளவீடுகள் கொண்டு தரவரிசைப்படுத்தப்படும். இதன்படி, 180 நாடுகளின் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா கடைசி இடமான 180வது இடத்தை பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு கிடைத்துள்ள மதிப்பெண் 18.9 மட்டுமே. மியான்மர் (19.4), வியட்நாம் (20.1), வங்கதேசம் (23.1), பாகிஸ்தான் (24.6) போன்ற நாடுகள் கூட இந்தியாவை விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளன. இந்தியாவில் பெருகி வரும் ஆபத்தான காற்றின் தரம் மற்றும் வேகமாக அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளே கடைசி இடத்திற்கு தள்ளப்பட காரணம் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த மதிப்பெண் பெற்றுள்ள நாடுகள், பருவநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகள் எடுப்பதில் எதிர் திசையில் பயணிப்பதாக ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இப்பட்டியலில் சீனா 28.4 மதிப்பெண்களுடன் 161வது இடத்தில் உள்ளது. கார்பன் உமிழ்வு விகிதங்களை கட்டுப்படுத்துவதாக உறுதி அளித்துள்ள போதிலும், 2050ம் ஆண்டில் இந்தியா, சீனா இரு நாடுகளும் அதிகளவில் கார்பன் உமிழ்வை வெளியிடும் முதல் இரண்டு நாடுகளாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். மேலும், தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், 2050ம் ஆண்டில் சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய 4 நாடுகள் உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வில் 50 சதவீதத்தை கொண்டிருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
இப்பட்டியலில் அமெரிக்கா 43வது இடத்திலும், ரஷ்யா 112வது இடத்திலும் உள்ளன. இந்தியாவை பொறுத்த வரை, பருவநிலை மாற்றத்தில் மிகக்குறைவான பங்களிப்பை மட்டுமே கொண்டிருப்பதாக பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்தார். மேலும், 2070ம் ஆண்டுக்குள் பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை இந்தியா கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு எதிர்மறை திசையில் இந்தியா பயணித்துக் கொண்டிருப்பதாக இந்த ஆய்வு முடிவுகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.