நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4) நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 8.30 மணி முதல், மின்னணு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். எனினும், தபால் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவித்த பிறகே, மின்னணு இயந்திர இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பேரவை தொகுதி வாரியாக ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் என 3,300 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், வாக்குப்பதிவு சதவீதம் அதிகம் உள்ள இடங்களில் 30 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் தனியாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை முழுவதும் பதிவு செய்யப்படுகிறது. வாக்கு எண்ணும் பணிக்காக 10 ஆயிரம் அலுவலர்கள், உதவியாளர்கள் உட்பட 24 ஆயிரம் பேர், நுண்பார்வையாளர்கள் 4,500 பேர் என 38,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். 58 பொது பார்வையாளர்கள், 817 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணிக்காக, 15 கம்பெனி துணை ராணுவ படையினர் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுதவிர, தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு 2 கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்ட நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் கணினி குலுக்கல் மூலம், பணிக்காக பிரித்து அனுப்பப்பட உள்ளனர்.