ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து இன்று சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கும் விஜய் சேதுபதி தன்னுடைய மகன் குறித்து முதல்முறையாக பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் விஜய் சேதுபதிக்கு அறிமுகமே தேவை இல்லை. ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த விஜய் சேதுபதி கதாநாயகனாக மாறி மக்கள் செல்வனாக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இப்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்ற பல முக்கிய கதாநாயகர்களோடு நடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். அவர் ஆரம்பத்தில் நடித்த படங்களின் பெயரை சொன்னால் இந்த படத்தில் விஜய் சேதுபதி இருக்கிறாரா? என்ற கேள்வி உங்களுக்கு உடனே வந்து விடும். ஆமாம், இயக்குனர் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் தனுஷ் நண்பனாக சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுபோல வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இவருடைய காட்சிகள் அந்த திரைப்படங்களில் ஒரு சில இடங்களில் தான் வந்திருக்கும். இப்படி சின்ன சின்னதாக நடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. அதைத் தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் விஜய் சேதுபதிக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. அடுத்ததாக சூது கவ்வும், தர்மதுரை, விக்ரம் வேதா என்று அடுத்தடுத்து விஜய் சேதுபதியின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே போனது. ஆனாலும் தனக்கு வந்த வாய்ப்பை எல்லாம் வேண்டாம் என்று சொல்லாமல் விஜய் சேதுபதி அதிகமான படங்களில் நடித்ததாலேயே இவருடைய ஆரம்ப கட்ட வரவேற்பு ஒரு சில திரைப்படங்களில் இல்லாமல் போய்விட்டது. ஆனால் இப்போது மீண்டும் தான் பழையபடி தன்னுடைய படங்களில் அதிகமான கவனத்தை செலுத்தி குறிப்பிட்ட படங்களில் மட்டும் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் விஜய் சேதுபதியை போலவே அவருடைய மகனும் கதாநாயகனாக மாறி இருக்கிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது தன்னுடைய மகன் குறித்து பேசி இருக்கிறார். அதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதி அவருடைய மனைவி மற்றும் மகன், மகளுடன் இருக்கும் புகைப்படம் குறித்து பேசுகையில், இந்த புகைப்படம் எடுக்கும் போது என்னுடைய மகனுக்கு 14 வயசு இருக்கும் அந்த காலம் எல்லாம் பொக்கிஷமானது. அப்போ எல்லாம் நான் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசாமல் கேட்டுக் கொண்ட காலம். அதற்கு பிறகு தான் அவர்களின் சில முடிவுகள் நம்ம முடிவுகளுடன் முரண்பட தொடங்கியது. இப்போது நமக்கு போட்டியாக நடிகராகவும் வந்துவிட்டார். சொல்லவே வேண்டாம்.. அடிக்கடி பிரச்சினைகளும் சண்டைகளும் வர தான் செய்கிறது. குழந்தைகளின் விஷயத்தில் சில அறிவுரைகளை சொல்லிக் பார்க்கிறோம் வேற வழி இல்லை என்றால் அமைதியாக இருக்க தான் தோணுகிறது.
மகனுக்கு அப்பாவிடம் வரும் வாக்குவாதம் நல்லது தான். அவருக்கு இருக்கிற அறிவு திறமையை அவர் அப்பாவான என்னிடம் தானே நிரூபிப்பார். அது தப்பு என்று சொல்லவில்லை. ஆனால் அவருடைய முடிவில் சில தவறுகள் இருக்கும் போது அதை புரிய வைக்க வேண்டியது என்னுடைய கடமையாக இருக்கிறது. நம்ம சொல்றதை கொஞ்சம் புரிந்து கொண்டால் அவருடைய வாழ்க்கைக்கு நல்லது. நானும் இது போலத்தான் என்னுடைய அப்பாவிடம் சண்டை போட்டு இருப்பேன்.. அப்போ புரியல, ஆனா இப்போ என்னுடைய மகன் செய்யும் போது தான் எனக்கே புரிகிறது. அது போல நம்முடைய சிந்தனைக்கு அவருடைய சிந்தனைக்கு அதிகமான வித்தியாசம் இருக்கிறது. அவருடைய சிந்தனை எல்லாம் அதிக வேகமானதாகவும், அட்வான்ஸ் ஆகவும் இருக்கிறது என்று தன்னுடைய மகன் குறித்து விஜய் சேதுபதி இந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.