“எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக.. எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள், அறிந்தவர்கள்!.
ஒரு தமிழன் ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்றுவிடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது. தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது. வி.கே.பாண்டியன் அவர்களை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜக சித்தரித்துள்ளது.
உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்று கொடுத்த முதல் இனம் தமிழினம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள். என்பது பாஜகவுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது.
எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக.. எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?. கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன் தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்கு தேவையான இரத்தமும் உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர். தான் பிறந்த மண்ணிற்கும் இருக்கும் மண்ணிற்கும் உள்ள மக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர். ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது. மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் வி.கே.பாண்டியன் குறித்து ஓடிசா பாஜக, தேர்தல் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் தான் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் வி.கே.பாண்டியன் ஒடிசாவின் உணவை, தமிழர் வழக்கப்படி வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவின் இறுதியில் ஒடிசாவில் பழக்க வழக்கங்களை தெரியாத பாண்டியன் வேண்டுமா என்று கூறி பை.. பை.. பாண்டியன் என்றும் விமர்சித்து இருந்தது பாஜக.
இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்து தான் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுக்கு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.