சாதகமாக முடிவு வரவில்லை என்றால் தலைவர்கள் ஒற்றுமையின்மையே காரணம்: ஆர்.எஸ்.பாரதி!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒருவேளை இண்டியா கூட்டணிக்கு சாதகமாக வரவில்லை என்றால், அதற்கு கூட்டணியில் உள்ள சில தலைவர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையே காரணம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்ததாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகவே உள்ளன. இந்நிலையில், ஐஏஎன்எஸ் செய்தி முகமையிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் முடிவு தொடர்பாக கூறியிருப்பதாவது:-

மக்களவை தேர்தல் முடிவுகள் ஒருவேளை இண்டியா கூட்டணிக்கு சாதகமாக வரவில்லை என்றால், கூட்டணியில் உள்ள சில தலைவர்களிடையே இருந்த ஒற்றுமையின்மையே காரணமாக இருக்கும். வாக்கு எண்ணிக்கையின் போது, வேட்பாளர்களின் முகவர்கள் கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2019-ல் 24 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 2024-ல் கூட்டணி கட்சிகளின் விருப்பத்தின் அடிப்படையில், தனக்கான இடங்களை விட்டுக் கொடுத்து, 21 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த சூழலில், ஏதேனும் தவறு நேர்ந்தால், இண்டியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் மற்றும் தலைவர்கள் மற்ற கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை விட்டுக் கொடுத்து மேற்கொள்ளாததே காரணமாக இருக்கும். இதற்கு மேற்கு வங்கம் மற்றும் கேரளாவே உதாரணம்.

கூட்டணியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் கடுமையாக பணியாற்றினர். ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் நடத்திய பேரணியில் அதிகளவிலான மக்கள் கூட்டம் காணப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியின், சக்திவாய்ந்த பிரச்சாரத்தின் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியே தனது பிரச்சாரப் பயணத்தில் மாறுதல்கள் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.