சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை!

தேர்தல் முடிந்தவுடனேயே தமிழகத்திலுள்ள 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாடு முழுவதும் உள்ள 1,228 சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணஉயர்வு அமலுக்கு வந்துள்ளது. பாஜக ஆட்சியில் உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டண உயர்வு, தேர்தல் முடிந்தவுடனே மீண்டும் அமலுக்குவந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து சாதாரண ஏழை, எளியமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

2023 டிசம்பரில் சிஏஜி அளித்த அறிக்கையில் மத்திய நெடுஞ்சாலைத் துறையின் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில், ரூ.7.50 லட்சம்கோடி முறைகேடுகள் நடந்ததாக அறிக்கை வெளியிட்டது. ஆனால், மத்திய பாஜகஅரசு சிஏஜி தெரிவித்த முறைகேடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது தேர்தல் முடிந்தவுடனேயே தமிழகத்திலுள்ள 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.