தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.. அதிலும், இரண்டு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
இந்த முறை, திமுக எம்பி கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட்டுள்ளார். கடந்த முறை தேர்தலிலும், இதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார் கனிமொழி.. அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் விஜயசீலன், நாம் தமிழர் கட்சியின் ரொவினா ரூத் ஜென் ஆகியோர் தூத்துக்குடியில் போட்டியிட்டுள்ளனர். இதில் திமுகவை பொறுத்தவரை, இந்த முறையும் வெற்றி தங்களுக்கே என்று நம்புகிறது.. இங்கு பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு முன்பு, தூத்துக்குடிக்கென்றே பிரத்யேகமாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார் கனிமொழி.. அதில் அவர் தந்திருந்த வாக்குறுதிகளில் பெருமளவு நிறைவேற்றிவிட்டதாகவும், முக்கியமாக ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடியதையும் குறிப்பிட்டு, இந்த பிரச்சாரத்தை திமுகவினர் மேற்கொண்டனர்.
இதுபோக மழை வெள்ள பாதிப்புகளின்போது செய்த நிவாரண பணிகளையும், திமுக மேற்கொண்டிருந்ததை மக்கள் கவனிக்கவே செய்தனர். மேலும், திமுகவுக்கு சாதகமாகவே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் மீதான விமர்சனத்தை முன்வைத்து, அதிமுக இங்கு களம் கண்டுள்ளது.. அதிமுகவுக்கு ஏற்கனவே இங்கு ஓரளவு வாக்கு வங்கி இருப்பதாலும், திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களையும் குறி வைத்தே களமிறங்கியிருக்கிறது. இதைத்தவிர, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மழை நிவாரண பணிகளை முதலாவதாக இங்கு வந்து மேற்கொண்டிருந்தது நன்மதிப்பை பெற்றுள்ளது.
பாஜகவை பொறுத்தவரை, இந்த முறை தொகுதியில் குறைவான கவனத்தையே செலுத்தியிருந்தது.. ஆனால், கடந்த முறை, மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இங்கு களம் கண்டதால், உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல பாஜக தலைவர்கள் தூத்துக்குடி தொகுதிககு வந்து சென்றார்கள்.. ஆனால், இந்த முறை, கூட்டணி கட்சிக்கு தொகுதியை ஒதுக்கியதால், பாஜக அதிக கவனம் செலுத்தவில்லை என்றே சலசலக்கப்பட்டது. எனினும், தமாகா வேட்பாளர் விஜயசீலன் இந்த தொகுதிக்கு பரிச்சயமானவர்தான்.. இதுபோக, பிரதமரின் வருகை, அண்ணாமலையின் யாத்திரை போன்ற காரணங்களினால் தூத்துக்குடியில் பாஜகவின் பலம் ஓரளவு பெருகியிருப்பதாகவே கருதப்படுகிறது. எனவே இவையாவும் தமாகாவுக்கு கை கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால், இந்த முறை பாஜக இங்கு தனித்தே களம் காணும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணிக்கு ஒதுக்கிவிட்டது. இந்த ஜாம்பவான்களுக்கு நடுவில், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் கடல்சார் பாதிப்புகளை முன்வைத்து நாம் தமிழர் கட்சியும் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தது. மக்களை நம்பியே தேர்தலை சந்தித்துள்ளதாக, அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில் தூத்துக்குடி களத்தில் நான்கு முனை போட்டி நிலவி, மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த தேர்தல் ரிசல்ட்டில் ஏற்படுத்தி வருகிறது.. தூத்துக்குடி தொகுதியில் முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் நிலையில் கனிமொழி முன்னிலை பெற்றுள்ளார். காலை 10.30 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியே முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சிவசாமி 2வது இடத்தையும், தமாகா வேட்பாளர் விஜயசீலன் 3வது இடத்தையும் பெற்று வருகிறார்கள். 2.30 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 152943 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.. அதிமுக வேட்பாளர் 41,509 வாக்குகளும், தமாகா வேட்பாளர் 31,864 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 2 மணி நிலவரப்படி, கனிமொழி 2,44,034 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.. இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் 67,522 வாக்குகளை பெற்று 2வது இடத்தில் உள்ளார்.. பாஜக கூட்டணியில் போட்டியிட்டுள்ள தமாகா வேட்பாளர் 47,094 வாக்குகளை பெற்று 3வது இடத்திலேயே இருக்கிறார்.. அதாவது, அதிமுக வேட்பாளரை விட, கனிமொழி 3 மடங்குக்கு மேல் வாக்குகளை அதிகம் பெற்றிருக்கிறார்.