டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும், மக்களவை தேர்தலையொட்டி பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தொடர்ந்த மனுக்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவை கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது.
டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறை கைதை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மக்களவை தேர்தலையொட்டி கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அவருக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி கடந்த மே 10ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இடைக்கால ஜாமீன் முடிந்து கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார்.
இதனிடையே உடல்நிலை பரிசோதனைக்காக இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரி கடந்த மாதம் டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்துடன் அவரது நீதிமன்ற காவலை ஜூன் 19 வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.