யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாய் தாக்கல் செய்த மனுவுக்கு இன்று பிற்பகலுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாய் கமலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி சுவாமிநாதன், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். ஆனால், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, சவுக்கு சங்கர் தாய் மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து, வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக நீதிபதி ஜெயச்சந்திரனை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கடந்த 4 ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பதில்மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டதால், நீதிபதி பாலாஜி உத்தரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக யூகிக்க வேண்டியுள்ளது என்பதால், வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டதில் அது சட்டப்படி பிறப்பிக்கப்படவில்லை என நீதிபதி சுவாமிநாதன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதால், வழக்கை முடிவு செய்ய பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்ததாக நீதிபதி குறிப்பிட்டார். அரசு பதில்மனு தாக்கல் செய்து ஒத்துழைப்பு வழங்கவில்லை. இன்று பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் தருகிறேன். அதன்பின் விசாரிக்கலாம். தனிநபர்களின் சுதந்திரம் முக்கியமானது. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்ட விரோதம் என்று முடிவு செய்தால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்த பின், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தால் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்குவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
சவுக்கு சங்கர் தாய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்புவது அவசியமில்லை. அது நீதித்துறை நேரத்தை வீணடிக்கும் செயல் என்றார். இருவர் தன்னை சந்தித்ததால் வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டு உத்தரவை ரத்து செய்ததாக நீதிபதி சுவாமிநாதன் கூறுவதும் தவறு என இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் வாதிட்டார். இதையடுத்து பிற்பகல் 2.15 மணிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.
