பா.ஜனதாவின் சில முக்கிய திட்டங்கள் மீதான தங்கள் அதிருப்தியை ஐக்கிய ஜனதாதளம் நேற்று வெளியிட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் புதிய அரசை அமைக்கிறது. இந்த கூட்டணியின் சார்பில் பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த கூட்டணியின் பிரதான கட்சிகளில் ஐக்கிய ஜனதாதளமும் ஒன்று. பிகாரில் ஆளுங்கட்சியாக உள்ள இந்த கட்சி மாநிலத்தில் 12 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்த கட்சி, ஆனாலும் பா.ஜனதாவின் சில முக்கிய திட்டங்கள் மீதான தங்கள் அதிருப்தியை நேற்று வெளியிட்டது.
இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி.தியாகி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முப்படைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டத்துக்கு வாக்காளர்கள் மத்தியில் கோபம் இருக்கிறது. இந்த திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும். ஏனெனில் அவை தொடர்பாக மக்களிடம் அதிருப்தி இருக்கிறது. பொது சிவில் சட்டத்தை ஐக்கிய ஜனதாதளம் எதிர்க்கவில்லை. அது குறித்து முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் சட்ட கமிஷனுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். ஆனால் இந்த சட்டம் தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்த வேண்டும். குறிப்பாக முதல்-மந்திரிகள், அரசியல் கட்சிகள், பல்வேறு பிரிவினருடனும் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பை நாட்டின் எந்த கட்சிகளும் எதிர்க்கவில்லை. பிரதமர் மோடியும் அதை எதிர்க்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்கான வழியை பிகார் காட்டியிருக்கிறது. இது காலத்தின் தேவை. அதை நாங்கள் தொடருவோம். மத்தியில் ஆட்சியமைக்க பா.ஜனதாவுக்கு எந்தவித முன்நிபந்தனையும் நாங்கள் விதிக்கவில்லை. நிபந்தனையற்ற ஆதரவைத்தான் ஐக்கிய ஜனதாதளம் வழங்கி இருக்கிறது. ஆனால் பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பது எங்கள் மனதிலும், இதயத்திலும் உள்ளது. மாநில பிரிவினைக்குப் பிறகு, பிகார் சந்தித்து இருக்கும் சூழ்நிலையை, சிறப்பு அந்தஸ்து வழங்காமல் சரி செய்ய முடியாது. இவ்வாறு கே.சி.தியாகி கூறினார்.
மத்தியில் கூட்டணி அரசுக்கு ஐக்கிய ஜனதாதளம் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியிருப்பதாக கூறினாலும், அக்னிபாத் உள்ளிட்ட திட்டங்களுக்கு அந்த கட்சி அதிருப்தியை வெளியிட்டிருப்பது டெல்லி வட்டாரத்தில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக அதிகமான போராட்டங்கள் நடந்த மாநிலங்களில் பீகார் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.