“சமூகநீதிக்கும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான நீட் என்னும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது. இதற்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும் என என்டிஏ கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதாவது, ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் என்.டி.ஏ மற்றும் மத்திய அரசை எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதனிடையே நீட் நோயை ஒழிக்க கைகோர்ப்போம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன. இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை. சமூகநீதிக்கு எதிரானவை. தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை. #NEET எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம் கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை!” என கூறியுள்ளார்.
இந்நிலையில் நீட் தேர்வை ஒழிக்காமல் திமுக ஓயாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக முதலமைச்சர் முக ஸ்டாலினின் எக்ஸ் பதிவை பகிர்ந்துள்ள அவர், “சமூகநீதிக்கும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான நீட் என்னும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது” என பதிவிட்டுள்ளார்.