வலுவான எதிர்க்கட்சி ஜனநாயகத்தின் ஆரோக்கியமான அறிகுறி: நடிகர் ரஜினிகாந்த்

“நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இது ஒரு மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். அதேநேரம், இந்த மக்களவைத் தேர்தலில், மக்கள் ஒரு வலுவான எதிர்க்கட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கு ஓர் ஆரோக்கியமான அறிகுறி” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையடுத்து, டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, நடிகர் ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இது ஒரு மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். அதேநேரம், இந்த மக்களவைத் தேர்தலில், ஒரு வலுவான எதிர்க்கட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கு ஓர் ஆரோக்யமான அறிகுறி” என்றார்.

பிரதமர் மோடியின் அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நன்றாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

தொடர்ந்து, திமுக கூட்டணி 40 சீட்களில் வெற்றி பெற்றது விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றது ஆகியவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.