அதிமுகவை காப்பாற்ற பழனிசாமி ஒன்றிணைவார்: புகழேந்தி!

அதிமுகவை காப்பாற்ற பழனிசாமி ஒன்றிணைவார் என்று பெங்களூரு வா.புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி, முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், வா.புகழேந்தி, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை கடந்த ஜூன்8-ம் தேதி தொடங்கினர். அதைத் தொடர்ந்து நேற்று மெரினா கடற்கரை எதிரில் உள்ளஜெயலலிதா சிலைக்கு கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகியோர் நேற்று மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பின்னர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பழனிசாமியும், சசிகலாவும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும். ஏற்கெனவே பன்னீர்செல்வம், நான் ஒன்றிணைய தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் ஒரு கட்சியை நடத்தி வருகிறார். அவர் வந்து இணைந்தாலும் வரவேற்போம். அனைவரும் ஒத்துழைத்தால் இணைப்பு எளிதாக முடிந்துவிடும். ஒரு நாள் வேலைதான்.

அதிமுக தொண்டர்கள் கனவின் படி, மக்களின் விருப்பத்தின்படி அதிமுகவினர் ஒன்றிணைந்து, வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பிடிக்க காரணமாக அமைவோம். ஒருங்கிணைப்பு குழு மாநில அளவில் மட்டுமல்லாது, மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவில் நிர்வாகிகளை நியமித்து கட்சியை ஒருங்கிணைக்க பாடுபடும்.

எங்களுக்கு யாரும் எதிரி இல்லை. எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும். எல்லாம் பழனிசாமி கையில்தான் உள்ளது. அவர் 5 நிமிடம் யோசனை செய்தால், அதிமுகவுக்கு விடிவு காலம் பிறக்கும். கட்சியை காப்பாற்றி ஆக வேண்டும். அதற்காக அதிமுக ஒருங்கிணைப்புக்கு பழனிசாமி ஒப்புக்கொள்வார். கட்சி பிரிந்து இருந்தால் தேசிய கட்சி உள்ளே வந்துவிடும். தமிழகத்தை திராவிட கட்சிதான் ஆள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கூறியதாவது:-

எந்த கட்சியிலும் சேராமல், நான் அதிமுக தான் என போராடிக் கொண்டிருப்பவர்கள் மட்டுமல்லாது பல்வேறு காரணங்களால் திமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் சேர்ந்தவர்களும் இணைய வேண்டும். எம்ஜிஆர் மறைவின்போது அதிமுகவில் இருந்தவர்களுக்கு இப்போது 70 வயதுக்கு மேல் ஆகியிருக்கும். அவர்களின் இறுதி ஆசை கூட அதிமுகவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது தான். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கட்சி வலுப்பெற உழைத்தவர்கள் பிற கட்சிகளில் அங்கம் வகித்தாலும் கூட அவர்களும் அதிமுகவில் இணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.