நாம் தமிழர் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மாநில கட்சி அந்தஸ்தை பெற்றதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அகில இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் 3-வது முறையாக ஆட்சியில் அமரவுள்ளது. அதே சமயத்தில், தமிழகத்தில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியோ 40-க்கு 40 தொகுதிகளை கைப்பற்றி தன்னிகரற்ற வெற்றியை பெற்றிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, ஓரிடத்தில் கூட வெற்றி பெறாதது மட்டுமல்லாமல் பல தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்து நிற்கிறது.
இந்நிலையில்தான், இந்தக் கடும் போட்டிக்கு நடுவே சிங்கிளாக களமிறங்கிய சீமானின் நாம் தமிழர் கட்சி தோல்வி அடைந்தாலும் 8 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக, அக்கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்திருக்கிறது. அதேபோல, இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் மாநில அந்தஸ்து கிடைத்துள்ளது.
இந்நிலையில், சீமானுக்கும், திருமாவளவனுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறியுள்ளதாவது:-
தேசம் என்றால் மக்கள். தேர்தல் என்பது மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான களம். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் என் அன்பிற்கினிய தம்பிகள் இருவர் படைத்திருக்கும் சாதனை எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. சமத்துவ சமுதாயம் படைக்க சமரசமின்றி போராடி வரும் தம்பி திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களில் வென்று மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. சிறுத்தைகளின் கால் நூற்றாண்டு கால தேர்தல் அரசியலில் இது ஒரு மைல் கல் சாதனை ஆகும்.
அதேபோல, புதிய சின்னத்தோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் தீரத்துடன் களம் கண்ட தம்பி சீமானின் நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை பெற்று, மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை. அரசியல் உங்களைத் தாக்கும் முன், உங்கள் தாக்கம் அரசியலில் இருக்கட்டும் என இளையோரை தொடர்ந்து வலியுறுத்துபவன் நான். ஜனநாயகம் வலுப்பெற அரசியலில் புதிய குரல்களும், இளைஞர்களின் பங்களிப்பும் அதிகரிக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை பெற்று மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற தம்பிகள் இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.