விமான நிலையத்தில் இனி செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் மட்டுமே செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அதிரடியாக பேட்டி கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஒரே நாளில் இரண்டு மூன்று முறைக்கும் மேல் கூட செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு காரசாரமாக பதிலளிப்பதோடு, எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கும் சுடச்சுட பதிலளித்து விட்டு செல்வார். குறிப்பாக அதிமுக – பாஜக வார்த்தை போர் உச்சத்தில் இருந்த போது செய்தியாளர்களுக்கு அடிக்கடி பேட்டி அளித்தார். சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்து விட்டு சென்றால் சற்று நேரத்தில் கோவை விமான நிலையத்தில் கூட பேட்டி அளித்து சென்று இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட அண்ணாமலை போகிற இடமெல்லாம் செய்தியாளர்களை சந்திப்பதாக விமர்சித்து இருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறுகையில் , “பாரதிய ஜனதா கட்சியில் புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். பேட்டி கொடுத்தே மக்களை ஈர்க்கப் பார்க்கிறார் அவர். விமானத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் பேட்டி கொடுக்கிறார். பேட்டி கொடுப்பது மட்டும் தான் அவர் வேலை. பேட்டி கொடுத்தே மக்களை இழுக்கப் பார்க்கிறார். தலைவர்கள் பல வழிகளில் மக்களைச் சந்திப்பார்கள். ஆனால் இந்த தலைவர் டெக்னிக்காக அடிக்கடி பேட்டி கொடுத்து கொடுத்து மக்களை நம்ப வைத்து வாக்குகளை பெற முயற்சித்து வருகிறார். அது ஒன்றும் தமிழ்நாட்டு மக்களிடத்தில் எடுபடாது. ஏன் எங்களுக்கு எல்லாம் பேட்டி கொடுக்கத் தெரியாதா? தினந்தோறும் பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்கலாம்? ஆனால், அதனால் நாட்டு மக்களுக்கு என்ன பயன்?” என்று நேரடியாக விமர்சித்து இருந்தார்.
இதேபோல அண்ணாமலையின் இந்த அணுகுமுறையை எதிர்க்கட்சியினர் பலரும் விமர்சித்தனர். சில நேரங்களின் அண்ணாமலையின் பேட்டி பாஜகவினருக்கு நெருடலை கொடுக்கும் விதமாக அமைந்திருக்குறது. இந்த நிலையில், லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை உள்பட பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வி கண்டது. அதன்பிறகு டெல்லி சென்று கட்சி தலைமையிடம் ஆலோசித்துவிட்டு சென்னை திரும்பினார்.
இந்த நிலையில், இன்று கோவை விமான நிலையம் சென்ற அண்ணாமலை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:-
லைப்ல இனி ஏர்போர்ட்டில் பிரஸ் மீட் வைக்க மாட்டேன். எல்லாமே முறைப்படுத்த போகிறோம். பாத்ரூம் போகும்போது, வரும்போதெல்லாம் இனி யாரும் பேசமாட்டார்கள். கோவையில் நான் செய்தியாளர்களை சந்திப்பது என்றால் கட்சி அலுவலகத்தில் மட்டுமே சந்திப்பேன். 24 மணி நேரத்திற்கு முன்பே முறையாக ஷெட்யூல் போட்டு கொடுத்து விடுவோம். ஏனெனில், விமானத்தில் இருந்து இறங்குகிறோம். ஏதோ இரண்டு விஷயம் நடந்து இருக்கும். வரும் போது தெரிவது இல்லை. எனவே முறைப்படி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறேன். இனி நாளைக்கு பிரஸ் மீட் வைக்கப்படும். தினமும் முறைப்படி நோட் அனுப்பி விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.