“தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டுமா.. ஏற்கனவே தனித்து நின்று தமிழ்நாடு முழுவதும் டெபாசிட் இழந்தது மறந்துவிட்டதா?” என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வியெழுப்பினார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளை கைப்பற்றியது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜகவும் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாததோடு, பல தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்தன. இந்த சூழலில், தமிழக காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், “தமிழகத்தில் இன்னும் எத்தனை காலம் தான் கூட்டணி கட்சிகளையே நாம் சார்ந்திருக்க வேண்டும்? இன்றைக்கு கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி வரலாறு உள்ளது. தமிழத்தில் இனியும் தோழமைக் கட்சிகளை சார்ந்துதான் காங்கிரஸ் அரசியல் செய்யப் போகிறதா? அல்லது சுயமாக இருக்கப் போகிறதா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்” என செல்வப்பெருந்தகை கூறினார்.
செல்வப்பெருந்தகையின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறப் போவதைதான் செல்வப்பெருந்தகை இவ்வாறு கூறுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதே பொதுக்கூட்டத்தில் செல்வப்பெருந்தகைக்கு பதிலடி கொடுத்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவர் பேசியதாவது:-
இன்று தமிழகத்தில் 40-க்கு 40 தொகுதிகளை நாம் பெற்றிருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் திமுகவும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து நின்றது. அதன் முடிவுகள் எப்படி இருந்தது? சிவகங்கையிலும், கன்னியாகுமரியில் மட்டும் 1 லட்சம் வாக்குளை பெற்று தோற்றோம். மற்ற தொகுதிகளில் எல்லாம் டெபாசிட் இழந்தோம் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா?
யாருக்குதான் ஆசை இல்லை.. நாம் வர வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், இப்போது இருக்கும் எதிரியை ஒற்றுமையாக இருந்து வீழ்த்துவது தான் முக்கியம். அதை விட்டுவிட்டு, நான் தான் தனியாக நிற்பேன், நான் தான் தனியாக தோற்பேன் என்று சொல்வது எல்லாம் எப்படிப்பட்ட பேச்சு? நான் யாருக்கும் பகைவன் அல்ல. உங்களுக்கு இருக்கும் அதே உணர்ச்சி எனக்கும் இருக்கிறது. காங்கிரஸை தமிழகத்தில் காலூன்ற வைத்த அந்த பெரியாரின் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். எனக்கு காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்று எண்ணம் இருக்காதா? ஆனால் அதற்கு தந்திரம் வேண்டாமா? எதிரி (பாஜக) ஒருவன் இருக்கும் போது, அவனை வீழ்த்தாமல் நாம் எப்படி அந்த இடத்திற்கு போக முடியும்?
அதுமட்டுமல்லாமல், இங்கு நாற்காலி காலியானால் தானே நீங்கள் அதில் உட்கார முடியும். நாட்டுக்காக உயிரை விட்ட இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரையும், நாட்டின் வளர்ச்சிக்காக தனது உயிரை பணயம் வைத்து வரும் சோனியா காந்தியையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும். அவர்கள் தியாகம் செய்யட்டும். அந்த தியாகத்தில் நான் இங்கு பதவியில் அமர்வேன் என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.