‘நீட்’ கல்வியை அரசியலாக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையிலான ஆட்சி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்லரசாக செயல்படும் நிலையில் மீண்டும் பொறுப்பேற்றதன் மூலம் இந்தியாவை வல்லரசாக மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
இந்தியாவை பல்வேறு துறைகளில் சரியான முறையில் வழிநடத்தக்கூடிய நேர்மையான, திறமையானவர்களை பிரதமர் தேர்ந்தெடுத்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடுவார்கள்.
நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்தில் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்கள் சில ஆண்டுகளாக பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் வெகு சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே தயவுகூர்ந்து கல்வியை அரசியலாக்க வேண்டாம். மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்ப வேண்டாம் என தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.