நாடு முன்னேற 3-வது முறையாக பிரதமர் மோடிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஐதராபாத்தில் இருந்து நேற்று (ஜூன் 11) இரவு விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை நடந்து முடிந்த இந்த மக்களவைத் தேர்தல் நிரூபித்துள்ளது. மக்கள் தங்கள் வாக்குகளை, இந்தியா மகத்தான நாடாக முன்னேற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடிக்கு மூன்றாவது முறையாக வாக்களித்துள்ளனர். உலகில் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது இந்திய தேசம் தான் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தங்களை வல்லுநர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு என்னுடைய ஒரு வேண்டுகோள், இப்பொழுதாவது, உங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் மீது உள்ள சந்தேகம் முற்றிலும் போயிருக்கும் என நான் நம்புகிறேன். வெற்றி பெற்றவர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள். ஆனால், அதனால் தமிழகத்துக்கு நன்மையா, இல்லையா என்பதை அடுத்து வருகின்ற தேர்தல்களிலே தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள் என நான் கருதுகிறேன்.
புள்ளி விவரங்கள் ஒரு போதும் பொய் சொல்வதில்லை. புள்ளி விவரங்களை பயன்படுத்தியவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். நான் உண்மையிலேயே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பாராட்டுகிறேன். எந்த இடத்தில் விட்டோமோ அந்த இடத்தில் இருந்து தொடருகிறார். நிச்சயம் அவரது கடுமையான உழைப்பை யாராலும் மறுக்க இயலாது. அந்த உழைப்புக்கு கிடைத்த மகத்தான ஓட்டுகளாக தான் இதைப் பார்க்கிறேன்.
ஒரே ஒரு வருத்தம் உள்ளது. நாடு முன்னேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், கோவை போன்ற ஒரு மாநகரம், மற்ற மாநகரங்களோடு போட்டி போட்டு முன்னேற வேண்டும். தமிழகமும் பிற மாநிலங்களோடு போட்டி போட்டு முன்னேற வேண்டும். ஆனால், இந்திய வளர்ச்சியில் தானும் அந்த வளர்ச்சியில் சேர்ந்து முன்னேறுவதற்கு பதிலாக, ஒவ்வொரு முறையும் கோவை மக்கள் வேறுவிதமாக முடிவெடுக்கிறார்கள். வளர்ச்சியோடு இணைந்து இந்த பயணத்தை தொடர்வதற்கு, வகையில்லாமல் செய்து விடுகிறார்கள் என்ற வருத்தம் உள்ளது. ஆனாலும், என்னதான் மகத்தான முன்னேற்றத்துக்காக நாம் சிந்தனை செய்தாலும், மக்கள் ஆதரவு தரும் வரை காத்திருக்க வேண்டும். அது தான் ஜனநாயகம்.
வாரிசு அரசியல் குறித்த விமர்சனத்தை காங்கிரஸ் வைக்கிறது, சொல்வது யார் என நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். ராகுல் காந்திக்கு எப்போதுமே ஞானோதயம் பிறகு தான் வரும். எது சிந்தனைகள் என்பது இருக்க வேண்டும். அதுவே, நாட்டின் நலன், முன்னேற்றத்துக்கு எதிரானதாக, ஒரு எதிர்மறை சிந்தனையாக மாறிவிடக்கூடாது. எல்லோரும் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது, உணர்ச்சி வயப்பட்டு தங்களது கருத்துகளை வைத்து விடக்கூடாது. நல்ல கருத்துகளை மட்டுமே வைக்க வேண்டும் என்பதை தான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் சொல்லியிருக்கிறார். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.