வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல்ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ அரசு பதவியேற்றது.
இந்த சூழலில் வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் இரு நாட்கள் புதிய எம்பிக்களின் பதவியேற்பு விழா நடைபெறும். பாஜக மூத்த தலைவர் ராதா மோகன் சிங் மக்களவையின் தற்காலிக தலைவராக இருந்து புதிய எம்பிக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றுதெரிகிறது.
மூன்றாவது நாளில் மக்களவைத் தலைவர் தேர்வு செய்யப்படுவார். அதற்கு அடுத்த நாளான ஜூன் 27-ம் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவார்.
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பதவியேற்றுள்ள சூழலில் ஜூலை 3-ம் தேதி முழுமையான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.