முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

4வது முறையாக ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் முதலமைச்சராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து களம் கண்டது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவோ பாஜக பவன் கல்யாண் ஜனசேனா கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். காங்கிரஸ் கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்டது. இந்த நிலையில் பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தங்களது தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரி ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கினார். ஆளுநர் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து இன்று விஜயவாடா விமான நிலையம் அருகே இருக்கும் கேசரப்பள்ளி என்ற பகுதியில் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ பி நட்டா, உள்ளிட்டோரும் நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராம்சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆந்திராவின் முதலமைச்சர் ஆக சந்திரபாபு நாயுடு பதவியேற்று கொண்டார். அவருடன் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.

இந்நிலையில் 4வது முறையாக ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மாண்புமிகு சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக ஆந்திரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றுள்ளார். உங்கள் தலைமை மாநிலத்திற்கு செழிப்பையும் நலனையும் கொண்டு வரட்டும். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையே இரு மாநிலங்களின் முன்னேற்றத்திற்காகவும், பிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்” என கூறியுள்ளார்.