சட்டமன்ற கூட்டத் தொடரை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.
பட்ஜெட் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக ஜூன் 20ஆம் தேதி சட்டமன்றம் கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதனையடுத்து, எந்தெந்த மானியக் கோரிக்கைகள் மீது எந்தெந்த நாட்கள் விவாதம் நடத்தப்படும் என்பது தொடர்பாக முடிவெடுக்க அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், கொறடா எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “9 நாட்கள் தான் சட்டமன்ற கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்கள். அதில், 8 நாட்கள் மட்டும்தான் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். வருடத்திற்கு 100 நாட்கள் சட்டமன்றத்தை நடத்துவோம் என்று கூறியிருந்தார்கள். அதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வழக்கமாக 40 நாட்கள் வரை நடைபெறும் கூட்டத் தொடர், தற்போது வெறும் 8 நாட்கள் மட்டும்தான் நடைபெறுகிறது. இதற்கு அதிமுக சார்பில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தோம். கூட்டத் தொடரை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இடைத் தேர்தலை காரணமாக சொன்னார்கள்.. பரவாயில்லை இடைத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு சட்டமன்றக் கூட்டத்தை தொடரலாம் என்று வலியுறுத்தினோம். அதற்கு செவிசாய்க்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
தேர்தல் அறிக்கையில் சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வோம் என்று கூறினார்கள் என சுட்டிக்காட்டிய வேலுமணி, “முழுவதுமாக நேரடி ஒளிபரப்பு செய்யாவிட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசும்போது நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை. அந்த நேரத்தில் மட்டும் நேரலையை முழுமையாக கட் செய்துவிடுகிறார்கள். மக்கள் பிரச்னைகளை எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துரைக்கும் போது அதனை உடனடியாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
அதேபோல பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதிப் பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்கே வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், 8 நாட்கள் தான் கூட்டத் தொடரை நடத்துவோம் என்று கூறியுள்ளது வருந்தத்தக்கது. இனி வரும் காலங்களில் 100 நாட்கள் சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் 2004ஆம் ஆண்டு 6 நாட்கள்தான் சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது என சபாநாயகர் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “அந்த நேரத்தில் ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கும். அதையெல்லாம் விட்டுவிடுவோம்.. தேர்தல் அறிக்கையில் திமுகதானே வாக்குறுதி அளித்தது. பழசை பேசாமல் தற்போது நடப்பதை பேச வேண்டும். கூடுதல் நாட்கள் சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கை” என்றும் கூறினார்.