காவிரி டெல்டா படுகையில் பருவமழைக்கு முன்பாக தூர்வார வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்!

பருவமழைக்கு முன்பாக காவிரி டெல்டா படுகையில் தூர்வாருதல் போன்ற அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முழுவதுமாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் துறையின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட இயக்குநர் தென்காசி சு.ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

நீர்வளத் துறையின் மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறிப்பாக தடுப்பணைகள் மற்றும் அணைக்கட்டுகள் கட்டுமானம் செய்தல், பல்வேறு நீர்ஆதார கட்டுமானங்களில் மேற்கொள்ளப்படும் புனரமைக்கும் பணிகள் மற்றும் பருவ மழைக்கு முன்பு காவிரி டெல்டா படுகையில் சிறப்பு தூர்வாரும் பணிகள் போன்ற அனைத்து பணிகளும் போர்க்கால அடிப்படையில் முழுவதுமாக செய்து முடிக்கப்பட வேண்டும்.

கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை தாக்கிய மிக்ஜாம்புயல் காரணமாகவும், தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத அதீத கனமழை காரணமாகவும் நீர்நிலை கட்டுமானங்களில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நிரந்தர வெள்ள சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழை காலங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, அணைகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.