சரியாக 2 மணிக்கு வருபவர்களை தான் தேர்வு மையத்திற்குள் அனுமதிப்பார்கள். 2 மணிக்கு பிறகு வருபவர்களை தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் போது எப்படி நேரப்பற்றாக்குறை ஏற்படும். எப்படி கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் மா சுப்பிரமணியன், நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதி நடத்தப்பபட்டது. அதன் முடிவுகள், இம்மாதம் 14 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், முன்கூட்டியே கடந்த 4 ஆம் தேதி வெளியானது. அதில், இதுவரை இல்லாதவகையில் 67 பேர் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் எடுத்தனர். இதேபோல் ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 6 பேர் முதலிடம் பிடித்தனர். இதேபோல் ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்தா 4 மார்க்கும், ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்தால் மைனஸ் 4 மார்க்கும் இருக்கும் போது சில மாணவர்கள் எப்படி 718, 719 மதிப்பெண்களை பெற முடியும் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல், சில மாணவர்களுக்கு நேரம் தாமத்தால் அவர்களுக்கு அதாவது 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது தேசிய தேர்வு முகமை. இந்த நிலையில் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தில் பேசிய தேசிய தேர்வு முகமை, 1,563 மாணவர்களுக்கு வருகிற 23 ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் எனவும் 30-ந்தேதி முடிவுகள் வெளியாகும் என்றும் மறு தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் எழுதலாம் என்றும் மறுதேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் இல்லாமல் அவர்கள் பெற்ற பழைய மதிப்பெண்ணே தொடரும் என்றும், கருணை மதிப்பென தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வில் தொடர்ந்து முறைகேடுகள் நடப்பதாகவும், நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மா சுப்பிரமணியன் கூறியதாவது:-
2016 ஆம் ஆண்டு இறுதியிலேயே நீட் தேர்வுக்கு எதிரான கருத்தரங்குகளை நடந்த தொடங்கினார்கள். ஆனால் 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நீட் தேர்வு தமிழகத்தில் அமலுக்கு வந்தது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. நீட் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்தே தமிழகத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து திமுக வலியுறுத்தி வருகிறது. தற்போது நடந்துள்ள தேர்விலும் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. ஒரு மதிப்பெண் எடுத்தால் 4 மதிப்பெண் எனும் போது எப்படி 718 மற்றும் 719 மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்பது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக 3 மணி நேரம் 20 நிமிடங்களில் தேர்வானது நடைபெறுகிறது. சரியாக 2 மணிக்கு மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். 5.30 மணிக்கு மாணவர்கள் வெளியே அனுப்பப்படுவார்கள். பிறகு எப்படி இந்த மாணவர்களுக்கு நேரப் பற்றாக்குறை ஏற்படும். சரியாக 2 மணிக்கு வருபவர்களை தான் உள்ளே அனுமதிப்பார்கள். 2 மணிக்கு பிறகு வருபவர்களை தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் போது எப்படி நேரப்பற்றாக்குறை ஏற்படும். எப்படி அவர்களுக்கு நேரச்சலுகை கொடுக்கப்பட்டு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. எனவே இந்த குழப்பத்திற்கு தீர்வு நீட்டை ரத்து செய்வது தான். எனவே நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.