உக்ரைனுக்கு கூடுதலாக நிதியுதவி: ஐரோப்பிய ஆணையம்

EU announces additional 205 million euros aid for Ukraine

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஆணையம் கூடுதலாக 22 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதியுதவி அறிவித்து உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் 107வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் பல நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதனால், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை ரஷ்ய படையினரின் ஏவுகணைகள் குண்டு வீசி அழித்து வருகின்றன.

இந்நிலையில், கருங்கடல் துறைமுகத்தில் ரஷ்ய படை முற்றுகையிட்டு தடுப்பு பணியில் ஈடுபட்டு இருப்பது, உக்ரைனை நெருக்கடியில் தள்ளியுள்ளது. இதனால், போர் தாக்குதல் ஒருபுறம் நடந்து வரும் சூழலில், ஏற்றுமதியை தடுத்து நிறுத்தி, அந்நாட்டின் பொருளாதார சூழலிலும் ரஷ்யா பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை தொடர்ந்து நீடிக்குமென்றால், லட்சக்கணக்கானோர் பட்டினியில் தள்ளப்படுவார்கள் என அதிபர் ஜெலன்ஸ்கி தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் கூறியுள்ளார். உக்ரைனால், கோதுமை, சோளம், எண்ணெய் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

போரால் சீரழிந்த உக்ரைனில் அதிகரித்து வரும் மனிதநேயம் சார்ந்த நெருக்கடிகளை குறைப்பதற்காக ஐரோப்பிய ஆணையம் கூடுதலாக 22 கோடி (20.5 கோடி யூரோக்கள்) அமெரிக்க டாலர் நிதியுதவியாக வழங்க முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. இதுபற்றி ஐரோப்பிய ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் பலாஜஸ் உஜ்வரி சி.என்.என். செய்தியாளர்களிடம் கூறும்போது, இதனால், ஐரோப்பிய ஆணையத்தின் மனிதநேயம் சார்ந்த மொத்த உதவியானது 34.8 கோடி யூரோக்களாக உள்ளது. இவற்றில் 1.3 கோடி மால்டோவா நாட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அந்நாட்டுக்கு புலம்பெயரும் மக்களுக்கு ஆதரவான நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார். உலகின் முக்கிய உணவு ஏற்றுமதியாளரான உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உணவு பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பிய ஆணையம் மேற்கொண்டு வருகிறது.