ஜி-7 மாநாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி ஜி-7 அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் விருந்தினர்களாக அழைக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஜி-7 மாநாட்டை தலைமையேற்று நடத்தும் இத்தாலி அரசு, இந்தியா உள்பட 12 வளரும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார். இத்தாலியில் அபுலியா பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் தொடங்கிய ஜி-7 மாநாடு இன்று நிறைவடைகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் ஜி-7 மாநாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி. உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.