மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க தமிழக அரசு உதவ வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலிறுத்தியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள களக்காடு, முண்டந்துறை வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. பின் 99 ஆண்டு குத்தகைக்காக பிபிடிசி நிறுவனத்தின், முகமது ஜின்னா என்பவரின் மகன் வழி பேரனான் முசில்வாடி தலைவருக்கு கொடுக்கபட்டது. இதற்கு உட்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் 2,500 தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களும் 5 ஆயிரத்தில் இருந்து 7,000 பேர் பகுதி நேர தொழிலாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
ஊதியம் குறைவு உள்ளிட்ட தொழிலாளர்களின் அவல நிலை குறித்து 1998-ம் ஆண்டு சட்டமன்றத்திலும், மத்திய அரசிடமும் நான் தெரிவித்தேன். அதன் காரணமாக தற்போது ஊதியம் ரூ.499 வரை உயர்ந்துள்ளது. விருப்ப ஓய்வு என்ற பெயரில் அங்கு பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களிடம் கட்டாய கையெழுத்து பெற்று அந்த நிர்வாகம் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. 45 நாட்களுக்குள் மாஞ்சோலையில் இருந்து வெளியேற வேண்டும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்திற்கான ஒப்பந்த காலம் தான் நிறைவடைகிறதே தவிர, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களை அதை காரணம் காட்டி நிர்வாகம் வெளியேற்றுவதற்கு சட்டத்தில் இடம் இல்லை. இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதி உள்ளேன். தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த பிரச்சினையை எழுப்பி மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.