நீட் தேர்வுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளை திமுக தூண்டிவிடுகிறது: ஜி.கே.வாசன்

“நீட் தேர்வுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளை தூண்டிவிட்டு திமுக தரமான கல்விக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக” தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று சனிக்கிழமை கும்பகோணம் வந்திருந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி 3-வது முறையாகப் பதவியேற்று சாதனை படைத்துள்ளார். அவர், 5 ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசாக, பொருளாதார முன்னேற்றம், தேசப் பாதுகாப்பு, ஏழைகள் முன்னேற்றத்துக்காக பாடுபடுவார். நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே கும்பகோணத்தைத் தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் மாவட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தை, சரியாக, கவனமாக, முறைகேட்டுக்கு இடமில்லாத வகையில் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

விவசாயிகள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, அவர்களுக்கு நிவாரணம் கொடுக்காமல் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து, அதை மறைக்க நினைப்பது தவறான செயல். பயிர் பிரச்சினை விவசாயிகளின் உயிர் பிரச்சினையாகும். இதில் அரசியல் செய்யக்கூடாது. கர்நாடக அரசு, சட்டத்தை மதித்து தமிழகத்துக்கான தண்ணீரைக் கொடுக்க வேண்டும். அதனை காலம் தாழ்த்த திமுகவும் காரணமாக இருக்கக்கூடாது. எனவே, கூட்டணி கட்சி மனநிலைக்கு அப்பாற்ப்பட்டு இதனை அணுகுவதோடு மட்டுமில்லாது கர்நாடக அரசிடமிருந்து தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் நீரைப் பெற்று தரவேண்டும்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இந்த விஷயத்தில் திமுக அரசு, மாணவர்களையும், பெற்றோர்களையும் தொடர்ந்து குழப்பிக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல. நீட் தேர்வில் இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள் 2-ம் இடம் பெற்று வருகிறார்கள். மேலும். இந்திய அளவில் 720 மதிப்பெண் பெற்று 61 மாணவர்கள் சாதனை படைத்துள்ளார்கள். எனவே, அரசியல் நோக்கத்துடன், நீட் தேர்வை ரத்துச் செய்ய வேண்டும் என திமுக கூறுவதோடு மட்டுமில்லாமல் கூட்டணிக் கட்சிகளையும் தூண்டி விட்டு தரமான கல்விக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதேசமயம் இன்னொரு பக்கம், போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாத அரசாக தமிழக அரசு இருப்பது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.