ஆந்திராவிற்கு இடம் பெயர முடிவு செய்துள்ளதாக பரந்தூர் கிராம மக்கள் அறிவிப்பு!

தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திராவிற்கு இடம் பெயர முடிவு செய்துள்ளதாக பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடி வரும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர். வரும் 24 ஆம் தேதி சித்தூர் ஆட்சியரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் போராட்டக்குழு அறிவித்துள்ளது.

சென்னை விமான நிலையம் போலவே பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றிய 20 கிராமங்களில் சுமார் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ஆம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக பரந்தூர், வளத்தூர், பொடவூர், நல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகானபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறன. குடியிருப்புகள், விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் வருவாய்த்துறை ஈடுபட்டுள்ளது. புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் விற்பதற்கான சிறப்பு வருவாய் துறை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் சுற்று வட்டார மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 690 நாட்களாக போராடி வருகிறார்கள். அதேபோல பரந்தூர் சுற்று வட்டார கிராம சபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொட்டையடிக்கும் போராட்டம், திருவோடு ஏந்தும் போராட்டம், அலுவலகம் முற்றுகை போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் அரசு இதனை கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்து நிலம் கையகப்படுத்தும் பணிகளை செய்து வருகிறது. இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் தற்போது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட அலுவலரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். வரும் 24 ஆம் தேதி சித்தூர் மாவட்ட அலுவலரை நேரில் சந்தித்து அங்கு வாழ்விடம் கேட்டு அங்கேயே குடியேற போவதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது 24 ஆம் தேதி காலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு ஆந்திராவுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்து உள்ளார்கள். பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தியும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தற்போது இப்படியொரு முடிவை போராட்டக்காரர்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, அந்த கிராம மக்கள் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் வாக்களிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.