ஈரோடு இடைத்தேர்தலில் ஆடு மாடுகளை போல் மக்களை அடைத்து திமுக ஜனநாயகத்தை படுகொலை செய்தது. இதேபோன்று தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் போலியான வெற்றியை பெற எல்லாவித முயற்சிகளையும் திமுக செய்யும் என்பதால் அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவின் புகழேந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. லோக்சபா தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் திமுக உற்சாகத்துடன் எதிர்கொள்கிறது. திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று தலைமை ஏற்கனவே அறிவித்து, பணிகளை தொடங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அபிநயா களம் காண இருக்கிறார். பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவித்தார். இதனால் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஈரோடு இடைத்தேர்தலில் ஆடு மாடுகளை போல் மக்களை அடைத்து திமுக ஜனநாயகத்தை படுகொலை செய்தது. இதேபோன்று தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் போலியான வெற்றியை பெற எல்லாவித முயற்சிகளையும் திமுக செய்யும் என்பதால் அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடாது என அதிமுக ஜெயக்குமார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
ஒரு அராஜகத்தின் அடையாளம் தான் திமுக. பணபலம், படைபலத்தை வைத்து ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கின்றது திமுக. ஈரோடு இடைத்தேர்தலிலேயே நீங்கள் இதையெல்லாம் பார்த்து இருப்பீர்கள். ஆடு மாடுகள் போல மக்களை அடைத்து வைத்து, ஜனநாயகத்தை படுகொலை செய்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். திருமங்கலம் பார்முலாவையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். பணத்தை கோடி கோடியாக வாரி இறைத்து போலியான வெற்றியை பெற முயற்சிப்பார்கள். எனவே தான் இந்த முடிவு கூடி எடுக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டை பொறுத்தவரை ஒரு 5 சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் புரட்சித் தலைவி ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை நடத்தினார். இதில் நானும் கலந்துகொண்டிருந்தேன். திமுக ஆட்சியில் இருக்கும் வரை தேர்தல் என்பது சுமூகமாக நடக்காது. மேலும் பணத்தை வாரி இறைத்து போலி வெற்றியை பெற முயற்சிப்பார்கள். எனவே தேர்தலை புறக்கணிப்பது தான் சரியான முடிவாக இருக்கும் என்று முடிவு எடுக்கப்பட்டது. எனவே இதேபோல தான் இன்று இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. முன்பு நடந்த தேர்தலில் கூட அராஜகம் நடந்தது. இது குறித்து புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு நீதிபதியின் ஓட்டையே திமுகவினர் போட்டுவிட்டார்கள். இதற்கு நீதிமன்றமே கண்டனம் தெரிவித்து இருக்கிறது. தேர்தலை நியாயமாக சுமூகமாக நடக்காது என்பதை கருத்தில் கொண்டே இந்த முடிவானது கூடி எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.