பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வை வெற்றி பெற வைக்கவே அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர்.அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வை வெற்றி பெற வைக்கவே அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அ.தி.மு.க.வின் முடிவு, தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ம.க. வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கும் வகையில், மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்பதற்கு தெளிவான சான்று. பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டும் பினாமி (பா.ம.க.) மூலம் போரிடுகின்றன. இந்தியா கூட்டணி, தி.மு.க. வேட்பாளரின் அமோக வெற்றியை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.