வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி!

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி அபார வெற்றிபெற்றார். அதேவேளை, ராகுல் காந்தி ஏதேனும் ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தவாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இதையடுத்து, வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோருடனான ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக்குப் பிறகு மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்ய ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, வயநாடு தொகுதிக்கும் எனக்கும் இடையிலான உறவு உணர்வுப்பூர்வமானது. வயநாடு மக்களுக்காக தொடர்ந்து நிற்பேன். வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார். தேர்தல் போரில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். வயநாடு மக்கள், தங்களுக்கு நாடாளுமன்றத்தில் 2 உறுப்பினர்கள் உள்ளதாக நினைக்க வேண்டும். ஒன்று நான். மற்றொருவர் எனது சகோதரி. வயநாடு மக்களுக்காக என் கதவுகள் என்றுமே திறந்திருக்கும். கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு மக்கள் கொடுத்த ஆதரவு, அன்பை மறக்கமாட்டேன். நானாக இருந்தாலும் சரி, தனது சகோதரியாக இருந்தாலும் சரி, வயநாடு மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம் எனப் பேசினார்.

இதன் மூலம் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.