“கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து வரும் ரயில்வே விபத்துகள் நரேந்திர மோடி அரசின் தவறான நிர்வாகத்தையும், அலட்சியப் போக்கையும் வெளிப்படுத்துகிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மேற்கு வங்கத்தில் நேற்று (ஜூன் 17) காலை கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்திருக்கிற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து வரும் ரயில்வே விபத்துகள் நரேந்திர மோடி அரசின் தவறான நிர்வாகத்தையும், அலட்சியப் போக்கையும் வெளிப்படுத்துகிறது. பயணிகளின் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவே தொடர் ரயில் விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ காரணம் ஆகும்.
பயணிகளின் பாதுகாப்புக்காக 2017-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய ரயில்வே பாதுகாப்பு நிதியை அதிகாரிகள் தங்கள் சொந்த வசதிகளை பெருக்கிக்கொள்ள பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த வரி செலுத்துவோரின் பணம் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பயன்படுத்த வேண்டும். ஆனால் அந்த நோக்கத்துக்கு பயன்படுத்தப்படவில்லை என்று 2021-ம் ஆண்டு சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி மடைமாற்றம் செய்யப்பட்டு ரயில்வே அதிகாரிகளுக்காக கட்டப்பட்ட வீடுகள், தங்கும் விடுதிகளிலும் கட்டுமான பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளன. இந்த நிதியில் இருந்து விலை உயர்ந்த வாகனங்களையும் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியுள்ளனர்.
இந்த நிதியானது அத்தியாவசியமற்ற விஷயங்களுக்கு தொடர்ச்சியாக செலவிடப்பட்டதற்கு சிஏஜி புள்ளி விபரங்கள் சாட்சியாக உள்ளன. கடந்த 2017 – 18 இல் ரூ. 463 கோடி, 2018 -19 இல் ரூ. 837 கோடி, 2019 – 20 ரூ. 1004 கோடி செலவிடப்பட்டதாக சிஏஜி கூறுகிறது. சிஏஜி தனது அறிக்கையில் பயணிகளின் பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டிய நிதியில் இருந்து ஆடம்பர பொருட்கள் வாங்கப்படுவதற்கு தவறாக பயன்படுத்தப்பட்டதாக ஆதாரத்துடன் குற்றம் சாட்டியிருக்கிறது. ரயில்வேத் துறை அலட்சியப்போக்குடன் செயல்படுவதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.
பயணிகளின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகையை அதற்கு செலவிடாததால் தொடர்ந்து ரயில் விபத்துகள் ஏற்படுவதற்கு நரேந்திர மோடி அரசு தான் பொறுப்பாகும். மனித உயிர்களின் இழப்புக்கு நிவாரணத்தொகை வழங்குவதின் மூலம் இழந்த இழப்பை ஈடுகட்ட முடியாது. இத்தகைய இழப்புகளை தடுக்கும் வகையில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிற முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதின் மூலமே இத்தகைய ரயில் விபத்துகளை தடுக்க முடியும். பயணிகளின் பாதுகாப்பு குறித்து அலட்சியப் போக்குடன் செயல்பட்டு, பயணிகளின் உயிரிழப்புக்கு காரணமான நரேந்திர மோடி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.