பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவிடம் அதிகளவில் அணு ஆயுதங்கள் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போதும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் தான் அதிகளவில் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், அதேநேரம் சீனா மற்ற நாடுகளைக் காட்டிலும் அணு ஆயுதங்களை வேகமாக அதிகரித்து வருவதாகவும் அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
உலகில் அமைதிக்கு அணு ஆயுதங்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணு குண்டுகள் எந்தளவுக்கு அழிவை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். அதில் இருந்து மீண்டு வரவே ஜப்பானுக்குப் பல தலைமுறைகள் ஆனது. மீண்டும் ஒரு முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதில் உலக நாடுகள் மிகத் தெளிவாக உள்ளன. இதற்கிடையே ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் உலக நாடுகளிடம் அணு ஆயுதங்கள் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் ரிப்போர்ட்டை வெளியிடும். அதன்படி இந்தாண்டிற்கான ரிப்போர்ட்டை இந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. அதில் பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல சீனா ஒரே ஆண்டில் தனது அணு ஆயுதங்களை 410இல் இருந்து 500 ஆக உயர்த்தியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக எந்தவொரு உலக நாடும் தன்னிடம் எத்தனை அணு ஆயுதங்கள் இருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். கசிந்த தகவல்கள், அந்நாட்டின் வசதி உள்ளிட்ட விஷயங்களை வைத்து இந்த அமைப்பு உலக நாடுகளிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன என்ற லிஸ்டை வெளியிடும். அதன்படியே இந்தாண்டும் அணு ஆயுதங்கள் தொடர்பான விரிவான ரிப்போர்ட்டை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இப்போது மொத்தம் 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், சீனா, வட கொரியா மற்றும் இஸ்ரேல் நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக உலகில் இருக்கும் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களில் சுமார் 90% அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளிடம் மட்டும் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த லிஸ்டில் இருக்கும் பல நாடுகள் கடந்தாண்டு புதிய அணுசக்தி திறன் கொண்ட ஆயுதங்களை ராணுவத்தில் சேர்த்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
உலகில் சுமார் 2,100 அணு ஆயுதங்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டுத் தாக்கத் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவையாக உள்ளன. அதேநேரம் இப்போது சீனாவும் முதல்முறையாக தங்கள் போர்க்கப்பல்களில் இதுபோல அணு ஆயுதங்களைத் தாக்கத் தயாரான சூழலில் வைத்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வடகொரியாவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்போது 172 அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களை விட இரண்டு அதிகமாகும். கடந்த 2023ல் இந்தியா தனது அணு ஆயுதங்களைச் சிறிதளவு அதிகப்படுத்தி இருப்பதாக அந்த ரிப்போர்ட் கூறியிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளும் இதில் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த ரிப்போர்ட்டில், “இந்தியாவின் அணு ஆயுத அமைப்புகள் இப்போது வரை பாகிஸ்தானை குறிவைத்தே இருக்கிறது. அதேநேரம் சீனா முழுக்க இருக்கும் இலக்குகளை அடையும் திறன் கொண்ட நீண்ட தூர ஆயுதங்களை உருவாக்கவும் இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருவதைப் போலவே தெரிகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அனைத்து நாடுகளும் தங்கள் அணு ஆயுதங்களை அதிகப்படுத்தும் திட்டங்களை வைத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற நாடுகளைக் காட்டிலும் சீனா வேகமாக தங்கள் அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.