கதாபாத்திரத்திற்காக நான் செய்த அனைத்தும் தகுதியானவைதான் என்று நடிகை வேதிகா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் வேதிகா. மதராசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடித்த முனி, சிம்பு நடித்த காளை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருப்பினும் 2013-ம் ஆண்டு பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை திருப்பினார் வேதிகா. இதைத் தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
இந்நிலையில், வேதிகா மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் யாக்ஷினி இணைய தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வௌியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் இந்த தொடர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடர் பற்றி ஒரு பேட்டியில் நடிகை வேதிகா கூறியதாவது:-
தற்போது இந்த தொடரில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். உண்மையில் இது மிகப்பெரிய விசயம். இது போன்ற பெரிய பாத்திரத்தில் நடிப்பது கூடுதல் பொறுப்பு. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த கதையில் நான் ‘மாயா’ என்றழைக்கப்படும் ஒரு யாக்ஷினியாக நடித்திருக்கிறேன்.
இந்த கதாபாத்திரம் நீண்ட நேரம் உருவாகினாலும், படப்பிடிப்பின்போது என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள எனக்கு நேரம் இல்லை. இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது எனக்கு உடல் ரீதியாக சவாலாக இருந்தது. ஆனால், நான் செய்த முயற்சிகள் அனைத்தும் அதற்கு தகுதியானவைதான். இப்போது என்னுடைய மற்ற படங்களுக்கு டப்பிங் பேசி கொண்டிருக்கிறேன். சில சமயங்களில், நான் உட்கார்ந்து, இவ்வளவு பெரிய விஷயங்களை செய்தது நான்தானா என்று நினைத்துப் பார்த்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.