நீட் தேர்வு மீது எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அப்படி ஒருவேளை தவறு இருந்தால் பாரபட்சம் பார்க்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. நீட் தேர்வு வினாத்தாளில் முறைகேடு, நீட் தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் முறைகேடு என தொடர்ந்து இதுபோன்ற மோசடிகள் அம்பலமாகி வருகின்றன. இதனால் நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், “ஆய்ஷு படேல் என்கிற மாணவி, தனது நீட் தேர்வு விடைத்தாளையே சிலர் மோசடி செய்து மாற்றி, வேறு விடைத்தாளை வைத்து விட்டதாக புகார் தெரிவித்தார். இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதனிடையே, இந்த புகாரை இன்றைக்கு விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மாணவி ஆய்ஷு படேல் தெரிவித்த குற்றச்சாட்டை பொய் என்று தீர்ப்பு அளித்திருக்கிறது.
இது ஒரு சம்பவம். இதேபோல நாடு முழுவதும் பல மாணவர்கள் நீட் தேர்வு பற்றி புகார் கூறி வருகிறார்கள். அதனால் அனைத்து மாணவர்களும் பொய் சொல்கிறார்கள் என்று நான் கூற மாட்டேன். அவர்களின் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிக அளவில் புகார் வருவதால், நீட் தேர்வை நடத்தக்கூடிய NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பை மத்திய அரசு பரிசீலனை செய்யப் போகிறது.
நீட் தேர்வு மீது தவறு இல்லை. அதனை நடத்தும் அமைப்பு மீது தான் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதில் நீட் தேர்வில் ஏதேனும் மோசடிகள் நடந்திருப்பது தெரியவந்தால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மத்திய அரசு உறுதியாக கூறியிருக்கிறது” என அண்ணாமலை கூறினார்.