கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டைமேடு அடுத்த கர்ணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தியதாக சுமார் 74 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (29), த.சுரேஷ் (46), ம.சுரேஷ் (45),சேகர் (61) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். அதே பகுதியில் அடுத்தடுத்து பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் மணி (58), கிருஷ்ணமூர்த்தி (62), இந்திரா (38) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சேலம் அரசுமருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி (60) ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் (55), ஆறுமுகம் (75), தனகோடி (55), டேவிட் (28) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்றிரவு 10 மணி நிலவரப்படி 2 பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்
இந்த நிலையில் இன்று (ஜூன் 20) காலை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டு, காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு நிவாரண பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்திக்க உள்ளார்.