ஜனநாயகத்தில் வன்முறைக்கும் வெறுப்புக்கும் இடமில்லை: ராகுல்!

பிரதமர் நரேந்திர மோடியின் கான்வாய் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான விடியோ வைரலானதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

நரேந்திர மோடியின் கான்வாய் மீது செருப்புகளை வீசிய சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. மற்றும் அவரது பாதுகாப்பில் கடுமையான குறைபாடும் உள்ளதாக தெரிகிறது. அரசின் கொள்கைகளுக்கு எதிரான நமது போராட்டம் காந்திய வழியில் (அகிம்சை) தான் நடத்தப்பட வேண்டும், ஜனநாயகத்தில் வன்முறைக்கும் வெறுப்புக்கும் இடமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு, தனது தொகுதியான வாரணாசிக்கு முதல்முறையாக நேற்று முன்தினம் (ஜூன் 19) சென்றிருந்தார். பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோயிலில் கங்கா ஆரத்தியில் கலந்துகொண்டு வழிபாடு செய்தபின், கே.வி. மந்திர் நோக்கிச் சென்றுள்ளார். பிரதமர் மோடி சாலை வழியே செல்லும்போது அப்பகுதி மக்கள், அவரை வரவேற்று, ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, பிரதமர் சென்ற கான்வாய் காரின் மீது செருப்பு ஒன்று வீசப்பட்டுள்ளது. அதனைக் கண்ட பிரதமரின் பாதுகாவலர், அந்த செருப்பினை எடுத்து, தூக்கி எறிந்தார். இந்த சம்பவம் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1.41 நிமிடம் கொண்ட அந்த விடியோவில், ஒருவர் ’செருப்பு வீசப்பட்டது’ என்று சொல்வதையும் கேட்கலாம்.