“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அதிமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 96 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் 16 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனையெல்லாம் சட்டப்பேரவையில் பேச வேண்டும் என அனுமதி கேட்டோம். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்.
கள்ளக்குறிச்சி மரணங்கள் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம். மக்கள் கொதிப்படைந்துள்ள இந்த சம்பவத்தை கூட சட்டமன்றத்தில் பேச வாய்ப்பளிக்கவில்லை என்றால், சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். எதிர்க்கட்சி என்ற முறையில் மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுவருவது எங்களின் கடமை. அந்த அடிப்படையில் தான் இன்று சட்டப்பேரவை கூடியதும் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து பேச அனுமதி கேட்டோம்.
கள்ளச்சாராயம் குடித்து ஏழை, எளிய மக்கள் உயிரிழந்துள்ளார்கள். அவர்களுக்கு இந்த அரசு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. இதை பேச அனுமதி கேட்டதற்கு தான் எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். சட்டமன்றத்தில் நியாயம் கிடைக்கவில்லை. சபாநாயகர் நடுநிலை வகித்திருக்க வேண்டும். ஆர்பி உதயகுமாரை கைது செய்யும் அளவுக்கு தூக்கி வந்து வெளியேற்றினர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இது ஜனநாயக படுகொலை. மக்களின் உயிர் போய் கொண்டிருக்கிறது. ஆனால் சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கவில்லை. ஹிட்லர் போல சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார்கள். சட்டமன்றத்தில் தான் இந்த விவகாரங்களைப் பேச முடியும். போதைப்பொருள் தடுப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூட்டம் நடத்துவதாக கூறுகிறார். ஆனால் அப்படியிருந்தும் போதைப்பொருள் நடமாட்டம் குறையவில்லை. திறமையற்ற அரசாக திமுக அரசு உள்ளது. பொம்மை முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.
கள்ளக்குறிச்சி நகரத்தின் மையப்பகுதியில் கள்ளச் சாராயம் விற்கப்பட்டுள்ளது. காவல் நிலையம், நீதிமன்ற வளாகத்துக்கு அருகே கள்ளச் சாராய விற்பனை நடந்துள்ளது. இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதற்கு சான்று இது. உளவுத்துறை என்ன செய்கிறது?. இந்த மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். அது தான் நியாயம்.
இன்னும் எத்தனை பேர் உயிரிழப்பார்கள் எனத் தெரியவில்லை. மருத்துவமனைகளில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என்ற எந்த தகவலும் இல்லை. விஷத்தை முறிக்கும் மருந்துகளும் கையிருப்பில் இல்லை. 2023ம் ஆண்டே கள்ளச் சாராயம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தோம். அப்போதே விவாதித்திருந்தால் இவ்வளவு உயிர்கள் போயிருக்காது.
திமுகவை சேர்ந்த இரண்டு கவுன்சிலர்கள் தான் கள்ளச் சாராய விற்பனையின் பின்னணியில் உள்ளனர். காவல்துறை அதைப்பற்றி விசாரிக்கவே இல்லை. காவல்துறையும் இதற்கு உடந்தை. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்ந்த பின்னும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது வேதனையைத் தருகிறது. அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் இருவர் கொல்லப்பட்டதாக கூறி அந்த வழக்கில் அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரினார். அதேபோல் கள்ளச் சாராய மரணங்களை சிபிஐ விசாரணை விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.