கோவை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

கோவை விமான நிலையத்துக்கு இன்று (திங்கள்கிழமை) காலை மீண்டும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவை அவிநாசி சாலையில் ‘சிட்ரா’ பகுதி அருகே அமைந்துள்ளது கோவை சர்வதேச விமான நிலையம். இங்கு உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் இன்று இ-மெயில் மூலம் மிரட்டல் பெறப்பட்டது. இந்த மிரட்டல் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் பெயரில் மெயில் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடு‌த்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 40 விமான நிலையங்களுக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இன்று மீண்டும் இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.