கள்ளக்குறிச்சிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்லாதது ஏன்?: எல்.முருகன்!

கள்ளக்குறிச்சிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்லாதது ஏன்? என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் மரணம் அடைந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த பலரும் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சிக்கு தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளது. அத்துடன் கள்ளக்குறிச்சியில் உடல்நலன் பாதிக்கப்பட்டோர், பெற்றோரை இழந்த மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்குமான உதவி நடவடிக்கைகளை சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரில் 34 பேர் தலித்துகள். ஆனால் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். இது ஏன்? “இந்தியா” கூட்டணியின் இந்த போக்கு கடும் கண்டனத்துக்குரியது. கள்ளக்குறிச்சிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்ல வேண்டும். இந்த சம்பவம் நடந்து இத்தனை நாட்களாகிவிட்டன.. இன்னமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்லவில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.