சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின்.
தனித் தீர்மானம் கொண்டுவந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் சம வாய்ப்புகளையும், சம உரிமைகளையும் கொண்டவர்களாக மாற்றுவதன் மூலம் தான் உண்மையான பொருளாதார வளர்ச்சி அடைந்த சமுதாயமாக நாம் மாற இயலும். அந்த நோக்கத்தோடு தான் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய தளங்களிலும் அனைத்து தரப்பு மக்களிடையே ஒரு சமநிலையை கொண்டுவருவதற்காக இடஒதுக்கீடு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தாழ்த்தப்பட்டோர், பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கே வளர்ச்சியடைய வழிவகை செய்து அதனை கடைப்பிடித்து வருகிறோம்.
சமீபகாலமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதே பேரவையில் நேற்றுமுன் தினம் கூட பாமக உறுப்பினர் ஜிகே மணி, சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் என பேசினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் திமுகவின் எண்ணமும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசுகிறேன்.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய பணி. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் பணி. மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்கள் அனைத்தும் இக்கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்பட்டு மத்திய அரசால் தொகுத்து வெளியிடப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டப்பிரிவு 3-ன் படி மத்திய அரசு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஆனால் புள்ளிவிவர சட்டம் 2008ன் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என்று பொதுவெளியில் பரவலாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த சட்டத்தின்படி மாநில அரசுகள் சமூக பொருளாதார புள்ளி விவரங்களை சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுளளதை தவிர, இதே சட்டத்தின் பிரிவு 3 (அ)-ன் படி இந்த அரசியலமைப்பு சட்டத்தின் 7வது அட்டவணையில் உள்ள இனங்கள் தொடர்பாக புள்ளி விவரங்கள் சேகரிக்க இயலாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது 7வது அட்டவணையில்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு 69வது இனமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த சட்டப்பிரிவு 32-ன் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் கணக்கெடுக்கப்படும் மக்கள் தொகை தொடர்பான விவரங்களை சேகரிக்க இயலாது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பொதுவெளியில் தவறாக சொல்லப்படும், புள்ளிவிவர சட்டம் 2008ன் கீழ் மாநில அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த இயலாது. சட்டப்படி, நிலைக்க கூடிய கணக்கெடுப்பு என்றால் மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் தான் மேற்கொள்ள வேண்டும். எனவே தான் இப்பணியை மத்திய அரசு மேற்கொள்வது தான் முறையாக இருக்கும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 246ன் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டிய அடிப்படையான பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பினை 2021ம் ஆண்டு மேற்கொள்ளாமல் மத்திய அரசு இன்று காலம் தாழ்த்தி வருகிறது. முதல் ஆண்டு கோவிட் தொற்றை காரணமாக சொன்னார்கள். கோவிட் தொற்று முடிந்து 3 ஆண்டுகள் கடந்தும் அப்பணியை மேற்கொள்ளாமல் இருப்பது மத்திய அரசு தனது கடமையைப் புறக்கணிக்கும் செயல்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாக நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசு இந்தப் பணியை மேற்கொள்ளும் போது கிடைக்கும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் மாநில அரசு எடுக்கும் முடிவுகள், இயற்றும் சட்டங்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருக்கும். மாறாக அந்தந்த மாநில அரசுகள் ஒரு சர்வே என்ற பெயரில் புள்ளி விவரங்களை சேகரித்து அதனை சட்டமாக மாற்றினால் நீதிமன்றங்களில் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது. இந்த காரணங்களின் அடிப்படையில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானத்தை முன்மொழிகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட தீர்மானம்:
இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சமஉரிமை, வாய்ப்பை கிடைக்க உறுதி செய்யும் வகையில் திட்டங்களை தீட்டி சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இந்த பேரவை கருதுகிறது. எனவே, 2021-ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும், அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் தனித்தீர்மானம் நிறைவேறியது என அறிவிக்கப்பட்டது.