தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பற்றியும், கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு குறித்தும் வாய்கிழிய நாள்தோறும் பேசுகிற அண்ணாமலை, கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா உள்ளிட்ட பிரபல ரவுடிகளுக்கும், பா.ஜ.க.வுக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகி வருவது குறித்து என்ன விளக்கம் தரப் போகிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு செயல்படுவதால் சமூக விரோத சக்திகள், கூலிப்படை தலைவர்கள், குற்ற வழக்கில் காவல்துறையினரால் தேடப்படுபவர்கள் ஆகியோர் தங்களை பாதுகாத்துக் கொள்ள தமிழக பா.ஜ.க.வில் இணைவது நீண்டகாலமாக நடந்து வருகிறது. கடந்த 2021 ஜனவரி 20 ஆம் தேதி பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பெரும் படையோடு பா.ஜ.க.வில் இணைந்தவர் கூலிப்படைத் தலைவர் சீர்காழி சத்யா. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த சத்யா பிரபல தாதாவாக கருதப்படுபவர். கோவையை சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராமுக்கு வலது கரமாக பல குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்.
2017 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் வழக்கறிஞர் ராஜா என்பவரை கொலை செய்த நபர்கள் மூன்று பேரை பொது மக்கள் முன்னிலையில் ஓடஓட வெட்டி படுகொலை செய்தவர் சீர்காழி சத்யா என்று காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வருபவர். காவல்துறை என்கவுண்டர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தவர். தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் சந்தேக நபர்களான 12 ரவுடிகளை அடையாளம் கண்டு அதில் முக்கியமான நபராக சீர்காழி சத்யாவை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இதற்கிடையே பா.ஜ.க.வை சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் மதுவிருந்துடன் நடந்துள்ளது. இதில் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். இவ்விழாவில் காவல்துறையால் தேடப்பட்டு வரும் கூலிப்படை தலைவரான பிரபல தாதா சீர்காழி சத்யா தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அவரை கைது செய்ய காவல்துறையினர் முனைந்த போது விழா முடிந்து காரில் செங்கல்பட்டு மார்க்கமாக சென்று கொண்டிருந்த போது பழவேலி பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்ற போது, தப்பிக்க முயன்ற சீர்காழி சத்யா கையில் வைத்திருந்த அரிவாளால் இன்ஸ்பெக்டரை வெட்டி காயப்படுத்திய போது காவல்துறையினர் அவரை காலில் சுட்டு வளைத்து பிடித்து கைது செய்துள்ளனர். இத்தகைய கொடூரமான கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவரை பா.ஜ.க.வில் சேர்த்து புகலிடம் கொடுத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
கமலாலயம் என்பது ரவுடிகளின் புகலிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் மாறியிருப்பது தமிழக பா.ஜ.க. எந்த திசையில் பயணிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். அரசியலில் ரவுடிகளின் ஆதிக்கத்தை அனுமதிக்கிற எந்த இயக்கமும் வளர்ந்ததாக வரலாறு கிடையாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பற்றியும், கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு குறித்தும் வாய்கிழிய நாள்தோறும் பேசுகிற அண்ணாமலை, கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா உள்ளிட்ட பிரபல ரவுடிகளுக்கும், பா.ஜ.க.வுக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகி வருவது குறித்து என்ன விளக்கம் தரப் போகிறார் என்பதை நாடே எதிர்பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.