சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாத சிறைத்தண்டனை!

டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா தொடர்ந்த அவதூறு வழக்கில் சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாத சிறைத்தண்டனையும், 10 லட்சம் அபராதமும் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது டெல்லி துணை நிலை ஆளுநராக இருக்கும் விகே சக்சேனா 2000களில் குஜராத் அரசில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சிவில் உரிமைகளுக்கான தேசிய கவுன்சிலின் தலைவராக இருந்தார். அவர் குறித்து சமூக ஆர்வலர் மேதா பட்கர் சர்ச்சைக்குரிய கருத்தினை அப்போது வெளியிட்டார். அதாவது வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு குஜராத் மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததாக தெரிவித்து இருந்தார். ‘தேசபக்தியின் உண்மையான முகம்’ என்ற தலைப்பில் மேதா பட்கர் வெளியிட்ட அறிக்கையில், லால்பாய் குழுவிற்கும் வி.கே. சக்சேனாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விகே சக்சேனா கடந்த 2001ஆம் ஆண்டு மேதா பட்கர் மீது அகமதாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2002 ஆம் ஆண்டு டெல்ல சாகேத் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 2011ஆம் ஆண்டு மேதா பட்கர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், தான் நிரபராதி என்றும் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரினார். இருப்பினும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த மே மாதம் 24ஆம் தேதி டெல்லி சாகேத் நீதிமன்றத்தின் பெருநகர மாஜிஸ்திரேட் ராகவ் சர்மா, இந்திய தண்டனைச் சட்டம், 1860ன் பிரிவு 500ன் கீழ் கிரிமினல் அவதூறு குற்றத்திற்காக மேதா பட்கரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். இதனிடையே அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என விகே சக்சேனா தரப்பில் சாகேத் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்ற நிலையில், கடந்த ஜூன் 7ஆம் தேதி தீர்ப்பு வெளியிடுவதை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், அவதூறு வழக்கில் சாகேத் நீதிமன்ற நீதிபதி ராகவ் சர்மா நேற்று தீர்ப்பை அறிவித்தார். அதில் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், மேத பட்கர் வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி கூறினார்.
அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக் கூடும் என்ற நிலையில், அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு தண்டனைக் காலத்தை 5 மாதமாக குறைத்ததாக நீதிபதி தீர்ப்பில் கூறினார். மேலும், அவதூறு வழக்கில் துணை நிலை ஆளுநர் விகே சக்சேனாவுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கவும் மேதா பட்கருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.