புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய சாக்ஷியா அதினியம் ஆகிய சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மோடி அரசு தனது கடந்த ஆட்சிக் காலத்தில் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்யா ஆகிய புதிய சட்டங்களை எதிர் கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்து விட்டு அவசர, அவரசமாக நிறைவேற்றிக் கொண்டது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 348வது பிரிவு, சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டுமெனக் கூறுகிறது. 3 சட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருத ஒலியமைப்பில் இந்தி மொழியில் அரசியலமைப்பிற்கு விரோதமாக உள்ளது. பல்வேறு மொழிகள் பேசும் மாநில அரசுகளின் உரிமை, கூட்டாட்சி தத்துவம், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகவும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பழைய சட்டத்தில் உள்ள மதவெறிக்கு எதிரான பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. மதவெறி, வெறுப்பு பேச்சிற்கு ஆதரவாக புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மதவெறி சக்திகளுக்கும் கார்ப்பரேட் மயத்திற்கும் ஆதரவாகவே மேற்படி இந்த சட்டங்கள். இதன்மூலம் சாதாரண ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு உள்ளிட்டு பல்வேறு மாநில அரசுகளும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்களும், பொதுமக்களும் போராடி வருகின்றனர். தமிழகத்தில் இரண்டு நாட்களாக மாநிலம் முழுவதும் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து போராடி வருகின்றன. எனவே ஒன்றிய பாஜக அரசு மக்கள் நலன் கருதி மேற்படி 3 சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை திரும்பப் பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் இச்சட்டங்கள் குறித்து விரிவான ஜனநாயகப் பூர்வமாக விவாதம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.