மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கியது அடிமைத்தனம் இல்லையா?: அண்ணாமலை!

பிரதமர் செங்கோல் வைத்தால் மட்டும் தவறு. மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கியதும் அதை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பிடித்து நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அது பெண் அடிமைத்தனம் இல்லையா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் நேற்று (ஜூலை 2) இரவு செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-

செங்கோல் என்பது பெண்களை அடிமைபடுத்துவது போன்றது என கூறிய மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கப்பட்ட நிகழ்வில் அதை பிடித்தபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். மக்களவையில் பிரதமர் செங்கோல் வைத்தால் தவறு. இவர்கள் செய்தால் சரி. இதுதான் இவர்களின் அரசியல் போலி முகத்திரை.

வெளிநாடு செல்வது குறித்து நான் மேற்கொண்டுள்ள முடிவு குறித்து கட்சி தலைமை அனுமதி கொடுத்தால் அதுகுறித்து பேசுவேன். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை தாக்கிய செல்வப்பெருந்தகை இன்று அக்கட்சியின் தலைவராக உள்ளார். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் தாய் மொழி பிரதான பாட மொழியாக இருக்க வேண்டும். கல்வி அனைவருக்கும் சமம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் தமிழக அரசின் திட்டத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கல்வி கொள்கையில் என்ன தவறு என்பதை கூற வேண்டும்.

ராகுல் காந்தி பேச்சை முக்கியமானதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. பணியின் போது உயிரிழந்த அக்னிபாத் திட்ட வீரருக்கு நிதியுதவி வழங்கப்படவில்லை என்றார். அன்றைய தினமே குடும்பத்தினர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் நிதியுதவி வழங்கப்பட்டது என பத்திரிகையாளர்களிம் கூறியுள்ளனர். மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்ட சட்ட திருத்தங்கள் மிகவும் வரவேற்கத்தக்கது.

திறமையில்லாவர்களை மேயராக நியமித்தால்தான் உதயநிதியை திறமையானவராக காட்ட முடியும். விமான நிலையங்களில் அண்ணாமலை பெயரை கூறி கடைக்காரர்களிடம் பாஜகவினர் அவதூறாக நடந்து கொண்டதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளது மிகவும் அபத்தமானது. விக்கிரபாண்டி இடைத்தேர்தலில் ஈரோடு இடைத்தேர்தல் மாதிரியை திமுவினர் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.