“நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் இன்று (ஜூலை 3) நடந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். விழாவில் விஜய் பேசியதாவது:-
நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வில் நான் மூன்று முக்கியப் பிரச்சினைகளைக் காண்கிறேன். முதலாவதாக நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. கல்வி என்பது முன்பு மாநிலப் பட்டியலில் இருந்தது. அதை எப்பொழுது ஒன்றிய அரசு பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வந்ததோ அப்போதுதான் இந்த சிக்கல் ஏற்பட்டது.
ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பதை அடிப்படையில் கல்வி கற்றலுக்கே எதிரான விஷயமாக நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல, மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு என்சிஆர்டி பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வை எப்படி எல்லோராலும் சமமாக எழுத முடியும். அதுவும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை எழுதுவது என்பதை யோசித்துப் பாருங்கள்.
மூன்றாவதாக, நீட் தேர்வு குளறுபடிகள் பற்றி நாம் நிறைய செய்திகளை வாசித்தோம். அதன்மூலம் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையே மக்களுக்குப் போய்விட்டது. நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் ஊடகச் செய்திகள் மூலமாக நாம் புரிந்து கொண்ட விஷயமாக உள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு நீட் விலக்கு மட்டுமே. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கொண்டு வந்த சட்டப்பேரவை தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு இதன் மீது காலதாமதம் செய்யாமல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
நீட் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன். ஒருவேளை அதில் நடைமுறை சிக்கல் இருந்தால் இடைக்கால தீர்வாக அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் கொண்டு வந்து சிறப்புப் பொதுப் பட்டியலை உருவாக்கி, அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தைச் சேர்க்க வேண்டும். மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் சிறப்புப் பொதுப் பட்டியலை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது தாழ்மையான வேண்டுகோள்.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ போன்ற நிறுவனங்களில் வேண்டுமானால் அவர்கள் நீட் தேர்வை நடத்திக் கொள்ளட்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் நீட் விலக்கு தேவை என்பதை எனது பரிந்துரையாகப் பகிர்ந்து கொண்டேன். இது நடக்குமா? நடக்கவிடுவார்களா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. எனது பார்வையைப் பகிர்ந்து கொண்டேன். எனவே, மாணவர்களே நீங்கள் மகிழ்ச்சியாகப் படியுங்கள். எந்த அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த உலகம் மிகப் பெரியது. அதில் நிறைய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஏதாவது ஒருசில விஷயத்தில் தோற்றால் அதில் முடங்கிவிடாதீர்கள். தோல்வி கண்டால், கடவுள் இன்னும் நிறைய வாய்ப்புகளை உங்களுக்காக வைத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அது என்னவென்பதைக் கண்டுபிடியுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.