மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மேற்கொள்ளும் ஒருதலைபட்சமான முயற்சி ஒற்றுமையைப் பாதிப்பதாகவே அமையும் என்று, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி கூறினாா்.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதைத் தொடா்ந்து, புதிய குடியரசுத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிா்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், டெல்லியில் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு மம்தா பானா்ஜி கடிதம் எழுதியுள்ளாா்.
ஏற்கெனவே, குடியரசுத் தலைவா் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் டெல்லியில் வரும் 15-ஆம் தேதி ஒன்றுகூடி ஆலோசனை நடத்த தீா்மானித்துள்ள நிலையில், அதே தேதியில் மம்தா பானா்ஜி தனிப்பட்ட முறையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருப்பது பல எதிா்க்கட்சித் தலைவா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மம்தா பானா்ஜியின் இந்த முயற்சி பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிடும் என்றும் எதிா்க் கட்சித்தலைவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சீதாராம் யெச்சூரி டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மம்தா பானா்ஜி எனக்கும் கடிதம் அனுப்பியிருப்பதை சமூக ஊடகம் மூலமாக தெரிந்துகொண்டேன். வழக்கமாக, இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்கள் பிற கட்சிகளுடன் பரஸ்பர கலந்துரையாடல்கள் மூலமாக இடம், தேதி, நேரம் ஆகியவை தீா்மானிக்கப்பட்டு நடத்தப்படும். அந்த வகையில், ஏற்கெனவே டெல்லியில் வரும் 15-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்த எதிா்க்கட்சிகள் தீா்மானித்துள்ளன. ஆனால், மம்தா பானா்ஜி ஒருதலைபட்சமாக கடிதம் அனுப்பியிருப்பது வழக்கத்துக்கு மாறானது. அதிக எண்ணிக்கையில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதே நமது நோக்கம். ஆனால், எந்தவொரு ஒருதலைபட்சமான நடவடிக்கையும் எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பாதிக்கத்தான் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.