கோவை திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் இன்று (ஜூலை 3) வழங்கினார்.
கோவை மாநகராட்சியின் 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார். கோவையின் முதல் பெண் மேயராக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டார். கல்பனா கோவை மேயராக பதவியேற்று முதலே பல்வேறு சலசலப்புகள் கட்சியினர் மத்தியில் நிலவி வந்தது. மேலும், பதவியேற்ற சமயத்தில், இவருடைய தம்பி, குடியிருக்கும் வளாகத்தில் வசிப்பவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், மேயர் கல்பனா இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தனது தம்பிக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
அதேபோல், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், கல்பனாவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திமுகவுக்கு குறைவான வாக்குகளே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக, கல்பனா மீது கட்சி தலைமைக்கு நிறைய புகார்கள் சென்றதாகவும், அதுகுறித்து விசாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், கோவை மேயர் கல்பனாவிடம் மாமன்ற கூட்டங்களில் திமுக கவுன்சிலர்களே வாக்குவாதத்தில் ஈடுபடுவர். அதேபோல, டெண்டர் ஒதுக்கீடு உள்ளிட்ட நிர்வாக ரீதியாகவும், மேயர் கல்பனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே, கோவை மேயர் ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகி வந்தது. மேலும், இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து திமுக தலைமை அறிவாலயம் அழைத்து விசாரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை வேறு ஒரு நபர் மூலம் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் இன்று கொடுத்துள்ளார்.
இதேபோல் திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணன் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். திமுக கவுன்சிலர்கள் அனைவருமே முன்னாள் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ மூலம் கவுன்சிலர் சீட் வாங்கியவர்கள். எனவே அவர்களில் பெரும்பாலானோர் தற்போது வரை அவருக்கு விசுவாசமாகவே இருந்து வருகின்றனர். மேயர் சரவணனும் அப்துல் வகாப் மூலமே கவுன்சிலராகவும் வாய்ப்பை பெற்றார். சரவணன் மேயரானதில் இருந்து அவருக்கும் அப்துல் வகாபுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இவர்களுடைய மோதல் போக்கால் திருநெல்வேலி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் முடங்கியிருப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
அப்துல் வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக மாநகராட்சி கூட்டங்களில் மேயருக்கு எதிராக குடைச்சல் கொடுத்து வந்தனர். மேயருக்கு எதிராக கோஷம் போடுவது மேயர் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பது, மன்ற அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது என்றெல்லாம் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. ஆனால் இதை பொருட்படுத்தாமல் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கானுடன் இணைந்து சரவணன், தனி வழியில் பயணித்து வந்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் நிலவிய பிரச்சினைக்கு முடிவுகட்ட மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இரு தரப்பினரிடமும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சினை தீரவில்லை. மேயர் விவகாரத்தால்தான் முன்னாள் மாவட்ட செயலாளர் அப்துல்வகாப்பின் பதவி பறிக்கப்பட்டது என்பதால் அவர்தான் திமுக கவுன்சிலர்களை தூண்டிவிட்டு தொடர்ச்சியாக பிரச்சினை செய்வதாக ஒரு தரப்பினர் கூறிவந்தனர். ஆனால் தாங்கள் யார் பேச்சையும் கேட்டு நடக்கவில்லை என்றும் மேயர் அனைத்து வார்டுகளையும் சமமாக கருதாமல் தனக்கு வேண்டப்பட்ட வார்டுகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவதாகவும், மாநகராட்சி திட்டப் பணிகளில் முறைகேடு செய்வதாகவும் திமுக கவுன்சிலர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கட்சி தலைமை குழப்பம் அடைந்திருந்த நிலையில், பிரச்சினையை தூண்டுவதாக தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் பவுல்ராஜ், மன்சூர், ரவீந்தர், கவுன்சிலர் இந்திரா மணியின் கணவரும் திமுக பிரதிநிதியுமான மணி (எ) சுண்ணாம்பு மணி ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவர் பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கட்சி தலைமை அதிரடியாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி திமுக கவுன்சிலர்கள் 38 பேர் கையெழுத்திட்டு மாநகராட்சி ஆணையர் தாக்கரேவிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி கடிதம் கொடுத்தது. பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால் சரவணனின் மேயர் பதவி தப்பியது. ஆனாலும் நீறுபூத்த நெருப்பாக பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்தது. மக்களவை தேர்தலுக்குமுன் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, அதற்கு ஒப்புதல் அளிக்காமல் திமுக கவுன்சிலர்களே குடைச்சல் கொடுத்தனர். பின்னர் மேலிடத்தின் உத்தரவால் பட்ஜெட் தீர்மானத்துக்கு மட்டும் திமுக கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்திருந்தனர்.
இந்நிலையில் மக்களவை தேர்தலுக்குப்பின் கடந்த வாரத்தில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். கூட்டத்தை நடத்த போதுமான கவுன்சிலர்கள் வரவில்லை என்பதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே நிலவிய பனிப்போர் எதிரொலியாக மேயர் பதவியிலிருந்து சரவணன் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை மாநகராட்சி ஆணையர் தாக்கரேவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்குப்பின் மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும், அதுவரை துணை மேயர் கே.ஆர். ராஜு பொறுப்பு மேயராக செயல்படுவார் என்றும் தெரிகிறது.